15.05.2021 அன்று யாழ்ப்பாணத்தில் வெளியாகும் 'தீம்புனல்" வாராந்த பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை:

கோவிட்-19 பேரவலமும் பிள்ளைகளின் சமூகமயமாக்கலிலான தேக்கநிலையும்: மாற்றுகளைத் தேடுதல் குறித்த கருத்தாடலுக்கான அவசியம்  

  


                                                                                                       இ.இராஜேஸ்கண்ணன்


கோவிட்-19 பேரவலம் மனிதனது வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியபடி தொடர்கிறது. நவீனத்துவத்தின் கனிநுகர் காலத்தின் பின்னான உலகத்தின் எழுச்சிமிக்க சூழலில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு அம்சங்களில் கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடரவுள்ள காலத்தின் ஒழுங்கை மாற்றியமைத்துள்ளது. பல்வேறு துறைகளினதும் எதிர்காலவியல் நோக்கையே புரட்டிப்போட்டுள்ள இன்றைய உலகளாவிய நிலவரம் கல்வியிலும் பாரிய மாற்றங்களையும் தடுமாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது. எதிர்காலத்துச் செல்நெறியை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு சமூகத்தைத் திட்டமிட்டு வழிநடத்துவதில் பெரும்பங்காற்றுவது கல்வி. கல்வியின் நோக்கு, இலக்கு, பாட உள்ளடக்கம், பயிற்று முறைகள், பங்காளித்துவம், நிர்வாக முறைகள் என்பவற்றில் மாத்திரமன்றி கல்வியினால் விளையப்போகும் வெளிப்பேறுகள் மற்றும் பயன்கள் என்பவற்றிலும் இதுகாலவரை கண்டிராத பாரிய மாறுதல்களை ஏற்படுத்தப்போகின்றது. 

கோவிட்-19 பேரவல காலத்தின் கல்விப் போக்குகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை கல்வி கற்பித்தல் செயன்முறையின் சாதக பாதகங்களை முன்வைத்தே நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக நிகழ்நிலைக் கல்வி, எண்ணிம ஊடகவழி கல்வி, இணையவெளிக் கல்வி என்பன சார்ந்து நிலவுகின்ற பிரச்சினைகள் கருத்தாடப்படுவதுடன், அவற்றுக்கான தீர்வுகளும் பரிந்துரைகளும் ஆய்வாளர்களால் அவர்கள் நம்புகின்ற கண்ணோட்டங்களின் பின்னணியில் முன்வைக்கப்படுகின்றன. முறைசார் மரபுவழிப்பட்ட கல்விக்காக ஏற்கனவே வகுக்கப்பட்ட ஏற்பாடுகளில் நம்பிக்கையீனங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. அவற்றுக்கான உடனடியான மாற்றீடுகள் குறித்து அவசரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த மாற்றீடுகளைக்கூட காலசூழ்நிலையின் நிலையில்லாத் தன்மையினால் நடைமுறைச் சாத்தியமாக்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுகின்றது. இந்நிலையில் எதிர்காலத்தில் எழப்போகும் சில பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கான சாத்தியமானதும், தொடருறு தன்மை கொண்டதுமான சில வழிமுறைகள் குறித்து சிந்திக்கவேண்டியது ஒரு கூட்டுப்பொறுப்பாகியுள்ளது. இந்தக் கூட்டுப்பொறுப்பானது கல்விபற்றிய ஆய்வுகளிலும், கல்விசார் செயன்முறைகளை ஒருங்கமைப்பதிலும் சமூகவியலாளர்கள், உளவியலாளர்கள், திட்டமிடலாளர்கள், உளவளத்துணையாளர்கள், ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் முதலான பல்துறைசார்ந்தவர்களின் பங்குபணிகளை கோரிநிற்கின்றது. 

கல்விக்கும் பிள்ளைகளின் சமூகமயமாக்கலுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறித்துக் கல்விச் சமூகவியலாளர்கள் கரிசனைகொண்டுள்ளனர். பிள்ளைகளின் அறிவு, திறன், மனப்பாங்கு, பயில்வு என்பவற்றுக்கு மேலாக அவர்களின் சமூகமயமாக்கல் குறித்து சமூகவியலாளர்கள் முதன்மையான கருத்தாடல்களைச் செய்கின்றனர். சமூகமயமாக்கல் என்பது பாடசாலை வகுப்பறை சார்ந்தது மாத்திரமல்ல. வகுப்பறை கடந்து, பாடசாலைக்கும் சமூகத்துக்குமான தொடர்புகளின் வழி சாத்தியமாவது. கோவிட்-19 பேரவல காலத்தில் பாடசாலைகளின் வழியேயான பிள்ளைகளின் சமூகமயமாக்கல் செயன்முறை பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. நீண்டகாலவோட்டத்தில் இது இட்டுநிரப்பமுடியாத பிரச்சினைகளை சமூகமட்டத்தில் ஏற்படுத்தப்போகின்றது. இன்று சமூகமயமாக்கல் செயன்முறையில் நிகழும் பிறழ்வுகளாலும், தேக்க நிலைகளாலும் பாடசாலை செல்லும் நிலையிலுள்ள இன்றைய சிறுவர்கள்  எதிர்காலத்தில் கட்டிளமைப் பருவத்துக்கு வரும் நிலையிலும், சமூகப்பொறுப்புக்களை ஏற்கும் முதிர்பருவத்துக்கு வரும் நிலையிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவுள்ளனர் என்பதை எதிர்வுகூற முடியும். இது எதிர்கால சமூகத்தின் நேர்முகமான செல்நெறிக்கான சவால்களாக உருவாகலாம். 

பாடசாலைகளுக்கும் சமூகத்துக்குமான இடையறாத் தொடர்பின் வழியாகத்தான் பிள்ளைகளின் சமூகமயமாக்கல் நடைமுறைச் சாத்தியமாகின்றதெனின், கோவிட்-19 பேரவல காலத்தில் முதன்மைப்படுத்தப்படும் 'சமூக இடைவெளி" எனும் கருத்தாக்கம் அந்த இடையறாத் தொடர்பைப் பாதிக்கின்ற முக்கிய விடயமாகின்றது. பாடசாலை வகுப்பறைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகின்றது. பாடசாலையின் கல்விசார்ந்த, சாராத ஆளணிகளிடையே சமூக இடைவெளி பேணப்படுகின்றது. சமூகத்திலுள்ள சமூக நிறுவனங்களுக்கும் (உ-ம்: சமூக மட்ட அமைப்புகள், சமய நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முதலானவை) பாடசாலைகளுக்குமிடையே இடைவெளிகள் தவிர்க்கப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. பிள்ளைகளின் பெற்றாருக்கும் பாடசாலைக்குமிடையிலான நேரடியான தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. தேவை ஏற்படுகின்ற தருணங்களில் அமுலாகின்ற சமூகத் தொடர்பை மட்டுப்படுத்தும் 'அடைப்புகள்"(lock downs) சமூக வலைப்பின்னலைப் பாதிக்கின்றன. இவை யாவற்றையும் உள்ளடக்கிய நிலவரம் பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் தேக்கநிலையை உருவாக்கி அதன் எதிர்மறை அறுவடைகளை எதிர்காலத்தில் தரப்போகின்றது. 

2020ஆம் ஆண்டு புதிய வகுப்புக்கு வகுப்பேற்றப்பட்ட மாணவர்கள் பெற்ற கல்வி மற்றும் சமூகம் சார்ந்த அனுபவங்கள் திருப்திகரமானதா? 2020ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் இணைக்கப்பட்ட மாணவர்கள் 2021ஆம் ஆண்டின் முன்பாதி முடியவுள்ள நிலையிலும் எழுத்து மற்றும் வாசிப்புப் பயிற்சிகளைப் பூரணமாகப் பெற்றுக்கொண்டார்களா? 2021ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பில் கற்றுவரும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அப்பியாசக் கொப்பியைக் கையாளுவதிலும் எழுதும் பயிற்சி பெறுவதிலும் அடிப்படை அனுபவம் கிடைத்துள்ளதா? ஆகக்குறைந்தது ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமான போதுமான ஊடாட்டம் உள்ளதா? போன்ற வினாக்களுக்கு திருப்தியான பதில் கிடைக்காது. இவற்றுக்கே சாதகமான பதில் கிடைக்காத நிலையில் பிள்ளைகளின் சமூகமயமாக்கல் பற்றி வினா எழுப்புவது அவசியமேயானாலும் வேடிக்கை மிக்கதாகக் கருதத்தக்கது. ஆயினும், இன்றுள்ள நிலையில் பிள்ளைகளின் நேர்முகமான சமூகமயமாக்கலில் கல்வி ஏற்பாடுகளின் பங்கை பெற்றோரும், அவர்கள் வாழும் வீடும் எவ்வாறு தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று ஒன்றைத் தேடவேண்டியது தவிர்க்கவியலாதது. 

பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் பெற்றோருக்கான பங்கு இரட்டித்துள்ளது. அவர்கள் வாழும் வீட்டின் சூழலும் கொடுக்கவேண்டிய சமூகமயமாக்கல் செயன்முறைக்கான பங்குடன் மரபுவழிப்பட்ட முறைசார் பாடசாலையின் பங்கையும் பெற்றோரே எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வேறொரு வகையில் சொல்வதானால் வீடே பாடசாலையாகவும் தொழிற்படும் நிர்ப்பந்தமே இது. வீடு பாடசாலையாகத் தொழிற்படுதல் என்பது வெறுமனே பிள்ளைகளுக்கு சூம் செயலிகள், வெபினார் வகையறாக்கள் வாயிலாக பாடங்களை கற்கும் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதோடு முடிந்துவிடுவதில்லை. மரபுவழிப்பட்ட முறைசார் பாடசாலை ஏற்பாடுகளில் கிடைக்கும் வாழ்வனுபவங்களின் ஆகக்குறைந்த அளவையேனும் பெற்றுத்தருவது பெற்றோரின் கடமையாகின்றது. அதற்கான பெற்றோரியம் காலத்தின் தேவையாகிவிட்டது.

வீடே பாடசாலையாக தொழிற்படுதல் எந்தளவுக்குச் சாத்தியமானது? அதற்கான வசதிகள் வாய்ப்புக்கள் வீட்டில் உள்ளமைந்துள்ளதா? போன்ற வினாக்கள் சாதாரணமாகவே எழும். வீடே பாடசாலையாக தொழிற்படும் நிலையில் பல நன்மை, தீமைகள் உள்ளன. நன்மைகள் எப்போதுமே மரபுவழிப்பட்ட முறைசார் பாடசாலைக் கல்வியின் பாதக நிலையின் அடிப்படையிலே பார்க்கப்படுகின்றன. குறிப்பாக மரபுவழியான பாடசாலைக் கல்வியில் நிலவிவரும் பௌதீக பாதுகாப்பின்மை, கல்விசார் போதனா முறைகளிலான அதிருப்தி, நெறியின்மைகள், உள மற்றும் மனவெழுச்சி சார்ந்த பாதுகாப்பின்மை, வாய்ப்புக்களின் விரிவாக்கமின்மை, அதிகார நிரலொழுங்கினால் வரும் பிரச்சினைகள், பிள்ளைகளின் தனித்துவமான கற்றல் கோளாறுகள் மற்றும் விசேட தேவைகள் முதலான பல பாதகமான காரணிகள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மரபுவழிப்பட்ட முறைசார் கல்வி ஏற்பாடுகளில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதுண்டு. பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வதற்கும் இத்தகைய காரணிகள் பின்புலத்தில் உள்ளன. ஆனால், இன்றுள்ள நிலை அப்படியல்ல. கல்வி ஏற்பாடுகள் தவிர்க்கமுடியாத நோக்கம் கருதிய முடக்கத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் வீடே பாடசாலையாக தொழிற்படுவதன் நன்மைகளை கருத்திலெடுத்தல் வேண்டும்.

வீடே பாடசாலையாக தொழிற்படுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. வீட்டில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் கிடைக்கும் பல வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக நூலக வாசகர் வட்டங்கள், குழு விளையாட்டுக்கள், களப் பயணங்கள், கைவினைச் செயற்றிட்டங்கள், சமுதாயமட்டத்திலான கொண்டாட்டங்கள், பாடல் மற்றும் பேச்சு நிகழ்ச்சிகள், அழைக்கப்பட்ட விருந்தினர் உரைகள், பகுதிநேர வேலைவாய்ப்புகள், சுகாதார விழிப்புணர்வு, காலநிலை மாற்றங்கள் பற்றிய கரிசனை, சாரணர் நிகழ்ச்சித்திட்டங்கள், கருவிகள் மற்றும் ஆய்வுகூடங்களைக் கையாழ்தல் முதலான பாடசாலையில் கிடைக்கும் வாய்ப்புகளை பிள்ளைகள் இழந்துவிடுகின்றனர். இந்த இழப்பை வீட்டுச்சூழல் ஈடுசெய்யுமா? அதற்கான மாற்றுவழி என்ன? ஆகிய வினாக்களை முன்வைத்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

இப்போதுள்ள இணையவெளி வாய்ப்புகளால் வீட்டிலிருந்து கல்வி கற்பவர்களுக்கு தங்கள் தங்கள் வேகத்துக்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தல், காத்திருக்காது அடுத்த பாட அலகுக்கு நகர்தல், பாடம் மற்றும் பாட அலகிலான விருப்பம் மற்றும் ஆர்வத்துக்கு ஏற்றவகையில் நேரம் ஒதுக்குதல், கற்றலுக்கு இடையிலான தமக்கான பொழுதுபோக்கை தாமே வடிவமைத்தலும் தீர்மானித்தலும், விரும்பும் தருணத்தில் கட்டுப்பாடற்ற அயற்சமூகத்தொடர்பை விரும்பியவாறு ஏற்படுத்திக்கொள்ளல், இணையத்தளப் பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மை, நம்பிக்கைமிக்க அறிவுரையாளர்களை(mentors) அண்மையில் வைத்துக்கொள்ளல் முதலானவற்றுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த வாய்ப்புக்களால் மாத்திரம் பிள்ளைக்கான வெற்றிகரமான சமூகமயமாக்கலை பெற்றுக்கொடுத்துவிட முடியுமா? என்பதும் இன்னொரு முதன்மையான வினாவாகின்றது. 

இந்நிலையில் பாடசாலைச் சூழலின் இழப்பினால் பிள்ளைகள் இழந்த பௌதீக, சமூக மற்றும் உளரீதியான அம்சங்களை பெற்றுத்தரும் வல்லமை பெற்றோருக்கும் வீட்டுச் சூழலுக்கும் வரவேண்டும் என்பதே ஒரேயொரு எதிர்பார்ப்பாக எஞ்சி நிற்கிறது. அதற்கு பொருத்தமான பெற்றோரியம் அவசியமாகின்றது. அந்தப் பெற்றோரியம் தனக்குள் பொருத்தமான ஆசிரியத்துவத்தையும் கொண்டிருக்கவேண்டியுள்ளது. ஒருவர் முழுநேரப் பெற்றாராகவும் முழுநேர ஆசிரியராகவும் இருப்பதிலான குடும்ப மட்டத்திலான சிக்கல்கள் அதிகம். பெற்றார் யாவரும் ஆசிரியத்துவம் கொண்டவராக இருப்பதற்கான தகுதி, பயிற்சி மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருப்பதும் பூரண சாத்தியமற்றது. இந்நிலையில் ஆகக்குறைந்தது ஆசிரியர் ஒருவருக்கான மாற்று மாதிரியம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதே சவாலுக்குரியதாகின்றது. அத்துடன் சமூக ஊடாட்டம் குறைந்து போன காலத்தில் சில குடும்பங்களில் நிலவும் வீட்டின் தீங்குதரும் சூழலின் வெளிப்பேறுகளாக திருப்தியற்ற பெற்றாரியம், பிள்ளைகள் மீதான புறக்கணிப்பு, பிள்ளைகளின் மீதான துஸ்பிரயோகம், சிறுவர் ஊழியம் முதலான சமூகத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகளும் குடும்பச் சூழலில் இணைந்திருக்குமாயின், அது மேலும் பிள்ளையின் கல்விச் செயற்பாடுகளை பாதிக்கின்றது. மேலும் பாடசாலை செல்லாப் பிள்ளைகளின்(unschooled children) நடத்தைகள் குடும்ப மட்டத்தில் விதவிதமாய் அமையும். தொலைக்காட்சியோடு பொழுதுபோக்குதல், வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபடுதல், இணையப் பாவனைமூலமான தேடுதலில் ஈடுபடுதல், கலைப்பொருட்கள் தயாரிப்பதில் தம்மைத்தாமே ஈடுபடுத்தல், அயலாரான நண்பர்களை வீட்டுக்கு அழைத்து அரட்டைகளில் ஈடுபடுதல் முதலான பல செயல்களில் ஈடுபடுவர். இவை யாவும் சமூக ஊடாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட இந்தக் காலத்தில் தவிர்க்கவியலாதவையாகின்றன. இத்தகைய சாதக, பாதக அம்சங்களைக் கடந்துதான் பிள்ளைகளின் சமூகமயமாக்கலை நேர்முகமாக உறுதிப்படுத்தவல்ல மாற்று மாதிரி ஒன்றினை கண்டடையவேண்டியுள்ளது.

இந்த மாற்று மாதிரியை சிந்திக்கும்போது பல விடயங்களைக் கருத்திலெடுக்கவேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டாலே அங்கு வேறுபட்ட வயதுள்ள பிள்ளைகள் இருப்பர். அவர்களுக்கான கலைத்திட்டங்கள் வேறுபட்டவை. பிள்ளைகளின் ஆர்வங்கள் வேறுவேறானவை. ஒரு விடயத்தை கற்றுக்கொள்ளும் வேகம் வேறுபட்டது. பெற்றோர் கொண்டுள்ள இலட்சியங்கள் பிள்ளைகளின் இயல்புகளைப் பெறுத்து வேறுபட்டவை. 'வீடே பாடசாலையாதல்" என்பது 'தேர்ந்து தொகுக்கப்பட்ட கல்விக்கான நிகழ்ச்சித்திட்டத்தை"(eclectic educational programme) உருவாக்கவேண்டிய தேவையுள்ளது. இதனை இக்கால நிலைமைக்கு ஏற்ப அயலிலுள்ள குடும்பங்களின் கூட்டிணைந்த கல்விகற்கும் முறையாக மாற்றவேண்டும். அதாவது ஒரு குடும்பம் மாத்திரமன்றி பல குடும்பங்கள் கல்விசார் செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து இணைய வெளியையும் தமக்கான சமூகவெளியையும் சேர்த்தே பகிர்ந்துகொள்ளும் ஒர் ஏற்பாடாக இது அமையவேண்டும். இது சமூகமட்ட நிறுவனங்களின் உயிர்ப்புமிக்க பிராந்திய செயற்பாடக அமைதல் வேண்டும். இதனை ஒருங்கிணைப்பதற்கான அரச தலையீடு ஒன்றும் அவசியம் தேவைப்படலாம். எதிர்பார்க்கப்படும் சமூகமயமாக்கலை பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய வகையில் துறைசார் வல்லுனர்களின் உதவியும் அரசின் உறுதுணையும் பெறப்படவேண்டிய அவசியம் உள்ளது. பொருத்தமான அரசதலையீடு ஏற்படாதவிடத்து கோவிட்-19 பேரவல காலத்து வணிகமயமாக்கம் கல்வியிலும் புதுப்புது அறிமுகங்களைக் கொண்டுவரும். அவை காலவோட்டத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட வணிகமாக்கப்படும். அந்த வணிகமயமாக்கப்பட்ட ஏற்பாடுகள் பின்னர் பிள்ளைகளுக்கான சமூகமயமாக்கலை தங்கள் நோக்குகளுக்கு ஏற்ப நகர்த்திச்செல்லும் நிலை உருவாகும். 

இன்றுமே நிகழ்நிலையான தேர்ந்தெடுக்கப்பட்ட வீடேபாடசாலையாதல் மற்றும் தேர்ந்து தொகுக்கப்பட்ட கல்விக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் விருத்திநிலையில் உயர்நிலையிலுள்ள நாடுகளில் வணிகமயமாக்கப்பட்டுத்தான் உள்ளது. அந்த நாடுகளில் நிலவும் பரீட்சித்தல் முறைகள் தனித்துவமானவை. கல்விக்குப் பின்னான வேலையுலகம் விரிவானது. நிகர்நிலை கல்விக்கான கருவிகள் மற்றும் தொழினுட்ப வசதிகள் அபரிமிதமானவை. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில் நிகர்நிலைக் கல்வி வாய்ப்புகள் இன்னுமே சென்று சேராத கிராமங்கள் உள்ளன. நிகழ்நிலை கல்விக்கு அவசியமான கருவிகள் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் கிட்டுவதில்லை. இத்தகைய வசதிகள் யாவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நிலையில்தான் இது சாத்தியமாகும். பிராந்திய ரீதியான கல்வி ஒலிபரப்பு, ஒளிபரப்புகள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்கவும், பரீட்சைகளுக்கு பிள்ளைகளை தயார்ப்படுத்தவும் எடுக்கும் தங்கள் பிரயத்தனங்களை திட்டமிட்டு பிள்ளைகளுக்கான சமூகமயமாக்கலை ஏற்படுத்த தகுந்த வகையில் விரிவாக்கம் செய்யவேண்டும். அதற்கான பொதுவான நிகழ்ச்சிகளின் மாதிரிகளை அரசதலையீட்டுடனும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனையுடனும் கல்விநிர்வாகத்துக்கான அதிகாரம் மிக்கவர்கள் தயாரிக்கவேண்டியுள்ளது. இது வல்லுனர்கள், பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள், சமூகமட்ட நிறுவனங்கள் கூட்டிணைந்த செயற்றிட்டங்களாக உருவாக வேண்டும். காலம் மாறும் என காத்திருப்போமாயின் நீளும் காலத்தில் ஒரு சமூகப்பொருத்தப்பாடற்ற சந்ததியின் உருவாக்கத்தை தடுத்து நிறுத்தவோ, அதனால் விளையப்போகும் வாழ்வுக்கான சவால்களைக் கட்டுப்படுத்தவோ மேலும் விலை கொடுக்கவேண்டிய நிலை உருவாகலாம்.  

      

       

 

   

  


Comments

Popular posts from this blog

கிராமியப் பெண்களின் பாரம்பரியத் தொழில்களில் உட்பொதிந்த பெண்கள் வலுவூட்டலுக்கான சுய உதவிக்குழுக்களின் பண்புகள்.

கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்: கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும்