கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்: கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும்

கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்: 

கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும்

இ.இராஜேஸ்கண்ணன்


கோவிட்-19 பேரவலத்தின் விளைவுகள் உலகளாவிய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களையும் பாதித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா வைரசின் பாதிப்பை உயிரியல் வயதின் அடிப்படையில் விளக்கினர். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களைப் பாதிக்கும் என்றும், அவர்களிடையே உயிரிழப்புகள் உயர்வாயிருக்கும் என்றும் முன்னர் தரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்துக்கள் இப்போது மாறியுள்ளன. பல்வேறு வயதுப் பிரிவினரும் உலகளாவிய ரீதியில் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். கோவிட்-19 இளைஞர்கள் மீது செலுத்திவரும் தாக்கம் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கது.  வெறுமனே உயிரியல் ரீதியாக மாத்திரம் அதன் தாக்கத்தை பார்க்காது, இன்று அதன் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியாக பாதிப்புகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகளும் கருத்தாடல்களும் நடைபெற்றுவருகின்றன. இளைஞர்கள் சமூகத்தின்மீது கோவிட்-19இன் தாக்கம் குறித்து தனியான கவனம் தேவைப்படுகின்றது. ஏனெனில், எதிர்கால சமூகத்தில் முதிர்வகிபங்குகளை எடுக்கவுள்ள இன்றைய இளைஞர்கள் மீதான கோவிட்-19இன் தாக்கத்தை வெறுமனே உயிரில் ரீதியானதாக மாத்திரம் பார்க்க முடியாது. அதனை இளைஞர்களின் நல்வாழ்வு, நேர்முக மேம்பாடு, உள மேம்பாடு, ஆளுமை விருத்தி மற்றும் தலைமைத்துவ பண்பிலான விருத்தி, பொருளாதார மேம்பாடு முதலான பல்வேறு விடயங்களை முன்னிறுத்திப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.     

சமூகத்தின் சக்திமிக்க பிரிவினராக இளைஞர்கள் விளங்கிவருகின்றனர். பொதுவாக 15 தொடக்கம் 24 வரையான வயதுடையவர்களை இளைஞர்கள் என்று வரையறுப்பர். இலங்கையைப் பொறுத்தவரை இந்த வயதெல்லை 15 தொடக்கம் 29 வரையென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், சில சமயங்களில் பண்புநிலையில் விளக்கமளிக்கவேண்டிய சூழ்நிலையில் உச்ச வயதெல்லையானது, இங்கு குறித்த எல்லையைக் கடந்து செல்லும் நிலையும் உள்ளது. எது எவ்வாறாயினும் திருமணம் செய்யாது பெற்றோருடன் வாழும் குறித்த வயதெல்லைக்குள் அடங்கும் ஆண்கள் மற்றும் பெண்களை இளைஞர்கள் என்று பருமட்டாக வசதிகருதி வரையறுத்துக்கொள்ளலாம். அந்த வயதெல்லைக்குட்பட்டவர்களில்கூட விசேடமான வகுதியினர் உள்ளடங்கியுள்ளனர். இடைநிலை வகுப்புக்களில் கல்விகற்கும் மாணவர்கள், உயர்தர வகுப்புக்களில் கல்விகற்கும் மாணவர்கள், உயர்தரத்துக்குப் பின்னான உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளைப் பெற்றுவரும் மாணவர்கள் முதலானோரை உள்ளடக்கிய முழுமையாக பெற்றோரில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் இளைஞர்கள் எனலாம். இவர்கள் ஏறத்தாழ 23 வயதுவரை ஏதோ ஒரு கல்வி ஏற்பாட்டினுள் தங்களை உட்படுத்தியிருப்பர். இன்னொருபுறம் இதே வயதுப்பிரிவினர் கல்வியைத் தொடராது அல்லது கல்வியிலிருந்து இடைவிலகி தொழில்களைச் செய்பவர்களாகவோ அல்லது தொழிலின்றிப் பெற்றோரில் தங்கி வாழ்பவர்களாகவோ இருப்பர். பொதுப்பரீட்சைகளின் நிறைவில் அல்லது உயர்கல்வியின் நிறைவுடன் கல்விக் காலத்தை முடித்துக்கொண்டு பெற்றோரில் தங்கியிருப்பவர்களும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றபின்னரும் பெற்றோருடன் வாழ்பவர்களும் இன்னொரு வகுதியினர். இவ்வாறான பல்வேறு வகுதியினர் இருப்பினும் 29 வயதுக்குட்பட்ட ஒருவர் திருமணமாகிவிட்டால் அவரை இளைஞர் என்று வரையறுக்கலாமா எனும் வழமையான கேள்வியொன்றும் உள்ளது. வரையறைகள் எதுவாயினும் தங்கள் திருமணம் வரை பெற்றோரில் தங்யிருந்து அல்லது பெற்றோருடனிருந்து வாழும் ஆண்-பெண்கள், திருநங்கைகள் போன்ற விசேட பிரிவினர், விசேட தேவையுடையவர்கள், மாற்றுவலுவுடையவர்கள் முதலான பலரும் இதில் உள்ளடங்குவர். இவர்கள் யாவரையும் கருத்தில் எடுத்துத்தான் இளைஞர் மீதான கோவிட்-19 தாக்கத்தைச் சரிவர விளங்கிக்கொள்ள முடியும்.

சூழலியல் முறைமைக் கோட்பாட்டின்படி(ecological system theory) இளைஞர்கள் வாழ்வின் உடனடியான சூழமைவிலிருந்து தங்களுக்கான மேலும் விரிந்துசெல்லும் பெரிய சூழல்வரை தமக்கான சூழலை மூன்று மட்டங்களில் கொண்டிருப்பர். அத்தகைய சூழலானது நுண்ணிலை, இடைநிலை, பருநிலை மட்டங்களைக் கொண்டிருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரின் குடும்பம் மற்றும் வீட்டு வாழ்வு சூழலிலிருந்து உருவாகும் காரணிகள் நுண்ணிலை மட்டத்தில் உள்ளடங்கும். இளைஞர்கள் ஊடாடும் பாடசாலை, சுகாதார பராமரிப்பு போன்ற பரந்துபட்ட சமூக முறைமைகளிலான மாற்றங்களால் உருவாகும் காரணிகள் இடைநிலை மட்டத்தில் உள்ளடங்கும். இளைஞர்களின் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கும் பரந்த சமூக நம்பிக்கைகள், பண்பாடு, நியமங்கள், விழுமியங்கள் என்பவற்றுடன் சமூகத் தொழிற்பாட்டுக்கான ஊக்கமும் தொடர்பான காரணிகள் பருநிலை மட்டத்தில் உள்ளடங்கும். இளைஞர்களின் வாழ்வியல் சூழமைவைத் தீர்மானிக்கும் இந்த மூன்றுவகைக் காரணிகள் மீதும் கோவிட்-19 கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய தாக்கம் இளைஞர்களைப் பல்வேறுவகையில் பாதிக்கின்றது. இவ்வாறு மூன்றுவேறு மட்டங்களில் விளக்கம் பெறுகின்றபோதிலும் அவை ஒன்று இன்னொன்றுடன் பின்னிப்பிணைந்த தொடர்புடையவையே.

இளைஞர் ஒருவரின் குடும்பம் மற்றும் வீட்டு வாழ்வுச் சூழலில் கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை? அந்தப் பாதிப்புகள் இளைஞர்களின் வாழ்வில் நுண்ணிலையில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது? என்பதை பல ஆய்வுகள் அறிக்கைப்படுத்தியுள்ளன. அவை குடும்ப உறுப்பினர்களின் தனிமைப்படுத்தல், சமூகத் தனிமைப்படுத்தல், குடும்பங்களின் இழப்பு, குடும்பங்களிலிருந்து பிரிந்திருத்தல், தனிமைச் சூழுலிலிருந்து தப்பிக்கொள்ள கைக்கொள்ளும் ஆரோக்கியமற்ற வழிமுறைகள் என்பவற்றால் இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறுகின்றன. இளைஞர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பாக தந்தை, தாய் போன்றவர்களிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால் பல உளரீதியான தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். தங்கிவாழும் நிலையில் குறித்த தனிமைப்படுத்தல்கள் அவர்களுக்கான அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்பவற்றில் குறைவு ஏற்படும் நிலையில் குடும்ப வாழ்வில் வெறுமையை உணர்கின்றனர். நாளாந்த கடமைகளின் கட்டமைப்பை கோவிட்-19 நிலவரம் மாற்றியுள்ளது. இது இளைஞர்களின் விளையாட்டுப் போன்ற பௌதிகச் செயற்பாடுகளின் அளவை வெகுவாக குறைத்துள்ளது. அதிகநேரம் நோக்கற்று வீடுகளில் வெறிதான ஓய்விலிருத்தல் பிள்ளைகளின் நித்திரை செய்வதற்கான கால அட்டவணையில் குழப்பத்தை உண்டாக்கி நித்திரைக்குழப்பத்தின் வழியான பல பிரச்சினைகளை உருவாக்குகின்றது. இளைஞர்களின் சமூகத் தனிமைப்படுத்தலின் முதன்மையான விளைவு அவர்கள் தமது சகபாடிகளுடனான ஊடாட்டத்தை பௌதிகரீதியாக இழத்தல். பாடசாலை மற்றும் சமூக மட்டங்களில் உள்ள தமக்கான சகபாடிகளை இழத்தல் தொடர்ச்சியான தனிமையை உருவாக்கும். அதனால் தொடர்பாடல் சாதனங்களில் நண்பர்களுடன் நீண்டநேரம் தொடர்புகொண்டு பேசுவர்; அரட்டைகளில் ஈடுபடுவர். அது அவர்களை மூத்தவர்களின் வெறுப்புக்கு ஆளாக்கும். வெறிதான தனிமையிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிம தொழினுட்பங்களில் பயிற்சிமிக்க இளைஞர்கள் அவற்றோடு தங்கள் பொழுதைக் கழிப்பர். எண்ணிம தொழினுட்ப பயிற்சியற்ற பெற்றோர் அவற்றை நிராகரிக்க முற்படுவர். வீடியோ விளையாட்டுகள், கைத்தொலைபேசி முதலானவற்றுடன் வரையறையற்ற சவகாசத்தை ஏற்படுத்திக்கொள்வர். இது அவர்களின் நடத்தை மற்றும் உளச் சுகாதாரத்தில் பல்வேறு பிறழ்வுகளை நீண்டநாட்களில் உருவாக்கலாம். கல்வியைத் தொடரும் பிள்ளைகளானால் ஒரு புறத்தில் கல்வி ஏற்பாடுகளின் நிர்ப்பந்தத்தால் நடைபெறும் நிகழ்நிலை வகுப்புக்களைத் தொடர்வதற்கு மேலதிகமாக பொழுதைக் கழிப்பதற்கான எண்ணிமத் தொழினுட்பசாதனப் பயன்பாட்டையும் சேர்த்து முழுநேரம் கருவிகளோடு புழங்குபவர்களாக மாற்றமுறுகின்றனர். உயிர்மை மிக்க சகபாடிகளின் பிரசன்னத்துக்கு சாதனங்கள் மாற்றாக அமையும்போது அது பல நடத்தைப் பிறழ்வுகளை இளைஞர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பாகும். பெற்றோரைப் பொறுத்தவரை பிள்ளைகளின் நன்னிலைக்கான பல பராமரிப்புத் தேவைகளையும் பாதுகாப்புத் தேவைகளையும் நிறைவேற்றவேண்டிய மேலதிக வேலைப்பழுவை சுமக்கின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெற்றோர் பாடசாலை செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு பொறிமுறைகளை சிந்தித்து நடைமுறைப்படுத்துவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது காலவோட்டத்தில் இளைஞர்கள் வீட்டுச்சூழலிலேயே துஸ்பிரயோகங்களில் ஈடுபாடுகொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிவிடும். வீட்டுச்சூழலில் இருந்தபடியே தனிமையை உணரும் இளம் பிள்ளைகள் மகிழ்வை மறுப்பவர்களாகவும்(anhedonia), சமூகப் பின்வாங்கிகளாகவும்(social withdrawals), நோக்கற்றவர்களாகவும்(hopelessness) மாறுகின்றனர். தனியன்களாக ஒவ்வொரு இளைஞர்களும் தங்களால் தினமும் செய்யக்கூடிய பெருமளவிலான செயற்பாடுகளை திடீரென இழந்துள்ளனர். இது அவர்களின் நாளாந்த வாழ்வில் பதற்றம் சம்பந்தமான பிரச்சினைகளாக மாறும். அவை நீண்டகாலத்துக்குத் தொடரும் நிலையில் மனச்சோர்வுக்கான அறிகுறிகளாக மாறிவிடும். 

இளைஞர்கள் ஊடாடும் பாடசாலை, சுகாதார பராமரிப்பு போன்ற பரந்துபட்ட சமூக முறைமைகளிலான மாற்றங்களால் உருவாகும் காரணிகளாலான இடைநிலை மட்ட பிரச்சினைகள் பலவற்றை குறித்து கவனமெடுக்கவேண்டுமென ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. உலகில் 188 நாடுகளில் ஏறத்தாழ 1.5பில்லியன் மாணவர்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சூழலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கல்விக்கான சூழலில் வழமையாக பெற்றுக்கொள்ளும் உளச்சுகாதாரத்தைப் பேணும் வளங்கள் மற்றும் வழிமுறைகளை இழந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. இயல்பான சூழலில் கல்விச்சாலைகளுக்குச் செல்லும் இளம் பிள்ளைகளுக்கு சுகாதார பராமரிப்புகள், பழக்கவழக்கங்கள் தொடர்பில் தகுந்த வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு என்பன தொடர்ச்சியாக வழங்கப்படும். கலைத்திட்டங்கள் வாயிலாகவும் சுகாதாரப் பிரிவினரின் தலையீடுகள் மூலமாகவும் அவை சாத்தியமாக்கப்படும். உளவளத்துணைக்கும், வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கலுக்கும் ஏற்பாடுகள் இருக்கும். இளம் பிள்ளைகளுக்கான நம்பிக்கைவாய்ந்த அறிவுரையாளர்களாக ஆசிரியர்கள், சகபாடிகள், சிரேஸ்ட மாணவர்கள் ஆகியோர் விளங்குவர். கோவிட்-19 பேரவலத்தினால் இளம் பிள்ளைகள் இவற்றை இழந்துள்ளனர். நீண்டகாலம் வீட்டிலான சிறைவாசம் உளரீதியான சுகாதாரத்துக்கான இடர்காரணியாகிவிடுகின்றது. கல்விச்சாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளாயினும்சரி, ஏனைய இளம் பிள்ளைகளாயினும்சரி தமக்கான உளப்பூரிப்பை இழந்துவிடும் நிலையில் அவர்களுக்கான மனவெழுச்சி மற்றும் ஊக்கல் என்பவற்றை இழந்துவிடுவர்.  

இளைஞர்களின் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கும் பரந்த சமூக நம்பிக்கைகள், பண்பாடு, நியமங்கள், விழுமியங்கள் என்பவற்றுடன் சமூகத் தொழிற்பாட்டுக்கான ஊக்கமும் தொடர்பான காரணிகளையும் கோவிட்-19 வெகுவாக பாதித்துள்ளது. இந்தப் பாதிப்புகளை பருநிலை மட்டத்தில் அணுகவேண்டும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பு, அவற்றின் இயக்க முறைமைகள், தொழிற்படு உறவுகள், பண்பாட்டு உள்ளடக்கங்கள் முதலான விரிவுபெறுகின்ற சமுதாயத்திலிருந்து இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய பல்வேறு விடயங்கள் கிடைப்பதில்லை. ஏற்கனவே வேலையின்மை, கீழுழைப்பு முதலான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாளாந்த கூலியுழைப்பை நம்பியுள்ள இளைஞர்கள் தமக்கான தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர். தனியார் துறைகளில் வேலைசெய்துவந்த இளைஞர்கள் ஆட்குறைப்;பு மற்றும் நாட்குறைப்பு நடவடிக்கைகளால் பொருளாதார உழைப்பில் சீரின்மைகளை அனுபவிக்கின்றனர். முறைசார துறைகளில் வேலை செய்பவர்களின் சேமிப்புகள் குறைந்து வறுமைநிலைக்குள் வீழ்கின்றனர். தனியார் துறைகளில் தேசிய  பாதுகாப்பு அளவீடுகளுக்கு மேலாக சுரண்டலும் துஸ்பிரயோகமும் நடைபெறுகின்றது. இது யுவதிகளைப் பெரும்பாலும் பாதிக்கின்றது. இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. விளையாட்டுக் கழகங்கள் வெறிச்சோடிப்போயுள்ளன. இளைஞர்கள் தங்கள் மனவெழுச்சிகளுக்கு வடிகால்தேடும் சமூதாயமட்டக் களங்கள் வெறிதாகியுள்ளன. எப்போதுமே சமூகக் கட்டமைப்பு மற்றும் அரச கட்டமைப்புகளில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதை புரட்சிகரமாக விரும்புகின்ற, சமத்துவம் மற்றும் சனநாயகம் என்பவற்றுக்காக கோசமெழுப்புகின்ற சுபாவமுள்ள இளைஞர்களால் இன்று வெகுஜனத் தளத்தில் எதிர்ப்பைக் காட்டுபவர்களாக(mass protestors) தொழிற்பட முடியவில்லை. இது நீண்டகாலத்தில் நேர்முகமான மாற்றத்தை அவாவிநிற்கும் இளைஞர்களின் இயல்பை வலுவற்றதாக்கிவிடும். இதனால் இளையோரின் சமுதாயப் பங்கேற்பு, அரசியல் பங்கேற்பு, பண்பாட்டுப் பிரதிநிதித்துவம் என்பன நீண்டகாலத்தில் சரிவுறும். சமுதாய வாழ்வில் அதிகளவு பங்கேற்கும் நிலையில்தான் பண்பாட்டுரீதியான அம்சங்கள் மூத்தவர்களிடமிருந்து இளைஞர்களுக்கு பரிவர்த்தனை செய்யப்படும். சமுதாய வாழ்விலான இடைவினைகள்தான் இளைஞர்களுக்கு சமூக விழுமியங்கள் மற்றும் நியமங்களை பகிர்ந்துகொள்ளச் சந்தர்ப்பத்தை அளிக்கின்றது.  நடைமுறையிலுள்ள சமூக இடைவெளிகள் பௌதிகரீதியிலும், பண்புரீதியிலும் இதனை பெரிதும் பாதிக்கின்றது. 

இளைஞர் என்ற வகையில் உள்ளடங்கியுள்ள கவனிக்கப்படாத அல்லது வலுவற்ற பிரிவினரின் பிரச்சினைகள் தனித்த கவனம் பெறவேண்டும். போரினால் பெறுமதிமிக்க ஒரு இளஞ்சந்ததியை காவுகொடுத்த சமூகத்தில் அதன் பாதிப்புக்களோடு வாழ்ந்துவரும் அவையவங்களை இழந்த இளைஞர்கள், மாற்றுவலுவுடைய இளைஞர்கள், விசேட தேவையுடைய இளைஞர்கள், விசேட வகைமைக்குட்பட்ட இளைஞர்கள், போதைக்கு அடிமையான இளைஞர்கள் போன்றோர் சாதாரணநிலையிலுள்ள இளைஞர்களிலும் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சமூக ஊடாட்டம் குறைந்த நிலையில், ஏற்கனவே குறைந்த நிலையிலுள்ள அவர்களுக்கான குடியியல் வெளி(civics space) மேலும் சுருங்கியுள்ளது. இந்நிலை வீட்டை மாத்திரம் குடியியல் வெளியாக காணும் நிலையை உருவாக்கும். ஆகக்குறைந்தது அவர்களுக்கான பொழுதுபோக்கு, இலாவகமாக்கல் போன்றவற்றுக்கே சவால்கள் ஏற்பட்டுள்ளன. போதை மற்றும் மதுப்பாவனைக்கு அடிமைப்பட்ட இளைஞர்களை வீட்டில்வைத்துக் கையாழ்தல் குடும்பங்களில் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது.

கோவிட்-19 இளைஞர்கள் மீது ஏற்படுத்தியுள்ள இத்தகைய தாக்கங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் சாத்தியமான வழிகளைச் சிந்திக்கவேண்டும். அது ஏற்கனவே குறிப்பிட்டுள்ள நுண்ணிலை, இடைநிலை, பருநிலை மட்டங்களைக் கருத்திலெடுத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இடைநிலை மற்றும் பருநிலை மட்டங்களில் தீட்டவேண்டிய திட்டங்கள் விசாலமான நோக்குகளுடன் அமைதல் வேண்டும். அத்தகைய விசாலமான திட்டமிடல்களில் வாண்மைத்துவமும் நிபுணத்துவமும் உள்ளவர்களின் பங்கு முதன்மையானது. எனினும், ஆகக்குறைந்தது நுண்ணிலையில் குடும்ப மட்டத்தில் இளைஞர்களைக் கையாழவும் வழிநடத்தவும் பொருத்தமான உபாயங்கள் உடனடியான தேவையாகின்றது. குடும்பத்தில் இளைஞர்களுக்கு உறுதுணையான சூழலைக் கட்டியமைக்க வேண்டும். இளைஞர்களின் உளச்சுகாதாரத்தை கையாழ்வதற்கு வல்லுனர்களின் ஆலோசனையுடன் ஊடகங்கள் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒலி-ஒளிபரப்புச் செய்யவேண்டும். மனிதர்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் ஊடகங்களின் உணர்திறன்மிக்க பங்கு முதன்மையானது. இடர்மிக்க காலமொன்றில் இளைஞர்கள் மத்தியில் மனவழுத்தத்தை முகாமைசெய்தல், உணர்வுமுகாமை செய்தல் போன்றவற்றுக்கான வழிகாட்டல்களைச் செய்யும் நிகழ்ச்சிகளை இளைஞர்கள் அதிகம் உபயோகப்படுத்தும் ஊடகங்கள் வாயிலாக வழங்க முன்வருதல் வேண்டும். உள அமைதிக்கும், உள ஆற்றுப்படுத்துலுக்கும் உதவத்தக்க படைப்பாக்கங்களை உருவாக்க வேண்டும். அவை குறும்படங்களாகவோ, ஆவணப்படங்களாகவோ, நேர்காணல்களாகவோ, கலை-கலாசார படைப்புக்களாகவோ அமையலாம். மொழிக்கல்வி, பண்பாடு மற்றும் மரபுரிமைகள் தொடர்பான ஆர்வமூட்டவல்ல அறிவூட்டல் நிகழ்ச்சிகள் வழங்கப்படவேண்டும். வலுவழந்துபோயுள்ள இளைஞர்கழகங்களின் செயற்பாடுகளை நிகழ்நிலை வழிமுறைகளால் உயிர்ப்படைய வைத்தல் வேண்டும். இளைஞர்கள் தங்கள் கருத்துக்கள், இலட்சியங்கள், எதிர்பார்ப்புகளை குடும்பங்களோடு சேர்ந்தே முன்வைக்கத்தக்க கருத்தாடல் வெளிகளை சமூக ஊடகங்களின்வழி உருவாக்கவேண்டும். அவற்றின் வழி தன்னம்பிக்கை, உயர்ந்த சுயமதிப்பீட்டை உருவாக்கவேண்டும். ஆகக்குறைந்தது ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலேனும் குடும்பநல வழிகாட்டல்-ஆலோசனைக்கான குழுவின் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் நன்னிலை தொடர்பில் தொடர்ச்சியான கரிசனை ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்கால சந்ததியொன்று பிறழ்வுக்குள்ளாகி எம் கண்முன்னே தொலைந்து போவதை மேலும் அதிகப்படுத்தவல்ல இந்த சூழ்நிலையையும் நாம் வெற்றிகொண்டேயாகவேண்டும்.    

          


Comments

Popular posts from this blog

கிராமியப் பெண்களின் பாரம்பரியத் தொழில்களில் உட்பொதிந்த பெண்கள் வலுவூட்டலுக்கான சுய உதவிக்குழுக்களின் பண்புகள்.