கிராமியப் பெண்களின் பாரம்பரியத் தொழில்களில் உட்பொதிந்த பெண்கள் வலுவூட்டலுக்கான சுய உதவிக்குழுக்களின் பண்புகள்.



சமுதாய அபிவிருத்திச் செயன்முறைகள் தொடர்பான இன்றைய சிந்தனைகளில் பெண்களின் பங்கேற்பு தொடர்பாக அதிக சிரத்தைகொள்ளப்படுகின்றது. கிராமிய சமுதாயங்களில் ஏற்படவேண்டிய அபி விருத்திச் செயன்முறையின் பிரதான பங்குதாரர்களாக பெண்கள் விளங்கவேண்டியதன் அவசியத்தினை சகலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர். இதற்காக கிராமிய சமுதாயங்களில் உள்ள பெண்களை வலுவூட்டும் வகையில் சுயஉதவிக் குழுக்கள் தொழிற்பட்டு வருகின்றன. கிராமிய அபிவிருத்தியில் பெண்களின் பங்கு குறித்து சமுதாய அபிவிருத்திச் சிந்தனையாளர்கள் கரிசனை கொண்டுள்ளனர். இவர்கள் மகளிர் மேம்பாடு, மகளிர் பங்கேற்புடன் கூடிய மேம்பாடு, மகளிர் வலுவூட்டல் முதலிய பல எண்ணக்கருக்கள் தொடர்பான செயல்நிலை விளக்கங்களைத் தருகின்றனர். இவற்றை உறுதிப்படுத்துவதற்குக் கிராமிய மட்டத்தில் வலுப்பெறவேண்டிய அமைப்பாகச் 'சுயஉதவிக் குழுக்கள்" சீர்மையாக அமைக்கப்படுதல் வேண்டும் என்பது இவர்களின் ஆலோசனை. ஒழுங்கமைந்த ஒரு பெண்கள் சுயஉதவிக்குழுவானது கிராமியப் பெண்களின் ஒன்றுகூடல், ஒத்துழைத்தல், ஒருமைப்பாடு, தீர்மானமெடுத்தல், பிரச்சினைகளை விவாதித்தல், தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் உள அழுத்தங்களுக்கு நிவாரணம் தேடல், சுயமதிப்பீடு முதலிய பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தகுந்த அமைப்பாகும் என்று விவாதிக்கின்றனர். இதனால் சுயஉதவிக் குழுக்கள் கிராமியப் பெண்களின் செயற்பாடுகளை பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களை நோக்கி விரிவுபடுத்தும் அமைப்புக்களாகத் தொழிற்படுகின்றன எனலாம்.

இலங்கையை பொறுத்தவரை கிராமிய மட்டத்தில் தொழிற்படும் பெண்கள் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள்(WRDS) இதற்கான அடிப்படை அலகுகளாகத் தொழிற்பட்டு வருகின்றன. இவை மாகாண மட்டங்களில் கிராமிய அபிவிருத்தித் திணைக்களங்களின் அதிகார எல்லையினுள் தொழிற்பட்டு வருகின்றன. மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்களின் நேரடியான கட்டுப்பாடுகளும் இவற்றின்மேல் உள்ளன. இத்தகைய அமைப்புக்கள் சுயஉதவிக் குழுக்களாக தொழிற்படுவதைப் போல அரசசார்பற்ற வேறும் பல அமைப்புக்களால் பெண்களுக்கான சுய உதவிக் குழுக்கள் சில குறித்த தேவைகளை விசேடமாகக்கொண்டு அமைக்கப்படுகின்றன. இத்தகைய சுய உதவிக்குழுக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படுகின்றன. இந்த நோக்கங்கள் யாவும் பெண்களை வலுவூட்டுதல் (empowering women) என்பதையே அடிப்டை இலக்காகக் கொண்டிருந்தன. 

பெண்களை வலுவூட்டுதல் தொடர்பான செயன்முறையானது பொதுவாகப் பின்வரும் நான்கு அம்சங்களை உள்ளடக்கியது:

பெண்களை தமக்கான விருப்பங்கள் மற்றும் தங்கள் நிலையிலான மாற்றத்துக்கான தந்திரோபாயங்களை செயல்வடிவமாக்கக்கூடிய வகையில் அவர்களினுள்ளேயான வலுவை(power within) உண்டாக்குதல்

பெண்களை தமது விருப்பங்களை அடையக்கூடிய வகையில் அத்தியாவசிமான வளங்களைக் கையாளத்தக்கவர்களாகவும் அதற்கான அவசியமான திறன்களை விருத்திசெய்வதற்குமான வலுவை(power to)க் கொடுத்தல் 

பெண்களை அவர்களின் கூட்டான ஆர்வத்தினை ஒழுங்கமைக்கும் வண்ணம் ஏனைய பெண்களுக்கான மற்றும் ஆண்களுக்கான அமைப்புக்களுடன் இணைவுகளை உருவாக்கவல்ல உடனிருக்கும் வலுவை(power with) ஏற்படுத்தல்

பெண்களுக்கு அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய வளங்கள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான சமமின்மைகளை வெற்றிகொள்ளத்தக்க வகையிலான செல்வாக்குச் செலுத்தும் வலுவை(power over) கொடுத்தல் 

மேற்கண்ட நான்கு குறிக்கோள்களையும் நிறைவேற்றத்தக்க அமைப்புக்களாகவே பெண்கள் சுய உதவிக்குழுக்கள் அமைகின்றன. இந்த நான்கும் பெண்களை பொருளாதாரம், சமூகம், அரசியல் எனும் வாழ்வின் வேறுபட்ட முகங்களிலும் தனியாள், குடும்பம், சமுதாயம், சந்தை, மற்றும் நிறுவனங்கள் எனும் வேறுபட்ட மட்டங்களிலும் வலுவடையச் செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளன. இத்தகைய இலக்குகள் அடையப்படும்போது பால்நிலை ரீதியாகப் பெண்கள் அனுபவித்துவரும் சமமின்மைகள் இல்லாதொழிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கிராமியப் பெண்களின் வாழ்வியல் போக்குகளின் பலம் மற்றும் பலவீனங்களைக் கருத்திலெடுத்துத்தான் சுய உதவிக்குழுக்கள் பற்றிய சிந்தனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை இன்று மகளிர் மேம்பாடு பற்றிய கோட்பாடுகளாக நிலைத்துவிட்டன. இவை இன்று கோட்பாட்டுச் சப்பாத்துக்கு ஏற்ப வாழ்வியல் கால்களை வெட்டுகின்ற ஆபத்தையும் உண்டாக்கிவிட்டது. சுயஉதவிக் குழுக்கள் தொடர்பான இன்றைய நவீன சிந்தனைகளின் ஊற்றுக்கள் பூர்வீக காலந்தொட்டு கிராமியப் பெண்களின் வாழ்வுமுறையின் மீதான அவதானிப்புகளின் வெளிப்பேறுகளாகவே கொள்ளப்படுகின்றன. கிராமியப் பெண்களிடத்தில் பூர்வீகமாக நிலவிவந்த வாழ்வின் கூறுகள் யாவற்றிலும் சுயஉதவிக் குழுக்களுக்கான அடிப்படைகள் இருந்தே வந்துள்ளன. கிராமியப் பெண்கள் கூடிச்செய்துவந்த தொழில்கள் பலவற்றினுள் இன்று முதன்மைப்படுத்தப்படும் பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் பற்றிய சிந்தனைகளுக்கு அடிப்படையான எண்ணக்கருக்கள் உள்ளடங்கியிருந்தன. 

கிராமியப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தில் பங்களிப்பதற்காக உணவுப் பண்டங்கள் தயாரித்தல், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், பன்னமிழைத்தல், கோழிக்குஞ்சு பொரிக்கவைத்தல், துணிகளுக்குச் சாயமிடல், மெழுகுப் பொருள்கள் தயாரித்தல் முதலிய பல உற்பத்தி நடவடிக்கைகளில் தனித்தும் கூட்டாகவும் ஈடுபட்டு வருகின்றனர். தனித்து ஈடுபடுவதிலும் கூட்டுநிலையில் ஈடுபடுதல் கூடிய உற்பத்தித் திறனையும் சந்தை வாய்ப்பினையும் வருமான ஈட்டத்தினையும் தருவதால் தனித்தனியே செய்த தொழில்முயற்சிகளைக் கூட்டாக்கி சுயஉதவிக் குழுக்களாக்கிச் செயற்பட முனைந்தனர். இவை முறைப்படுத்தப்பட்ட(formal) சுயஉதவிக் குழுக்களை உருவாக்கத் துணைநின்றன. கடன்படு திறனை அதிகரித்தல், உற்பத்திக்கான பெறுமதி சேர்த்தலை(value addition) செய்தல், உற்பத்தித் துணைச் சாதனங்களைப் பெறுதல், சந்தைக் கேள்வியை உருவாக்குதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல் முதலியவற்றுக்கு அந்த முறைப்படுத்தப்பட்ட சுயஉதவிக் குழுக்கள் துணையாகின்றன. ஆனால் முறைப்படுத்தப்படாத வகையில் மேற்கண்ட தொழில்களைச் செய்து ஒரு சுயஉதவிக் குழுவுக்கான அடிப்படையான சில பலங்களுடன் கிராமியப் பெண்கள் இயங்கிவந்துள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு புவிசார் நிலப்பிரிவுகளிலும் அமைந்துள்ள கிராமங்களில் அவற்றின் புவிசார் அம்சங்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் வளங்கள் என்பவற்றுக்கு அமைவாகப் பெண்கள் செய்துவரும் சுயதொழில்கள் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தின் முதன்மையான இயற்கை வளங்களிலொன்று பனை ஆகும். வலிகாமம், தீவகம், தென்மராட்;சி மற்றும் வடமராட்சி என வகுக்கப்பட்ட நிர்வாக மற்றும் புவிசார் சிறப்பியல்பு மிக்க பிரதேசங்களில் பரவலாக நிறைந்திருக்கும் இயற்கை வளமாக அமைந்த போதிலும் ஒப்பீட்டுரீதியில் வடமராட்சிப் பிரதேசத்தில் பனைவளத்தின் பயன்பாடு சார்ந்த தொழில்முயற்சிகள் அதிகமாக நிலவிவருகின்றன. பனையிலிருந்து கள் மற்றும் பதனீர் பெறும் தொழில் செய்யும் சமுதாய வகுப்பினர் அதிகம் வாழும் பிரதேசமாக இது அமைந்திருப்பதால் பனங்கட்டி தயாரித்தல், பன்னமிழைத்தல், ஒடியல், புழுக்கொடியல், பனாட்டு முதலிய பனம் உணவுப் பொருள்கள் தயாரித்தல் போன்றவற்றைப் பெண்கள் தமது சுயதொழில்களாகவும் சில சந்தர்ப்பங்களில் சிறு குழுவினராகக் கூடிச்செய்யும் தொழில்களாகவும் செய்துவந்தனர். இத்தொழில்களில் பன்னமிழைத்தல் சற்று விரிவாக்கம் பெற்ற தொழிலாக அமைந்தது.

பன்னமிழைத்தல் தொழிலில் உள்ளடங்கும் செயன்முறைகளைச் சுருக்கமாக அறிந்து கொள்வது அது கொண்டிருக்கும் சுயஉதவிக் குழுவுக்கான பண்புகளை புரிந்துகொள்ளத் துணையாகும். பெண்கள் தமது வீட்டுப்பணிக்கு அப்பால் கிடைக்கின்ற நேரங்களில் பெரும்பாகத்தினை பாய், பொட்டி, நீற்றுப்பெட்டி, சுளகு, தொப்பி, கடகம் முதலிய பொருள்களைப் பின்னுவதற்கு ஒதுக்குவர். இவற்றிலும் மிக அதிகமாகப் பாய் பின்னுவதை இன்றும் செய்து வருகின்றனர். இவற்றைப் பெண்கள் தனித்தனியே தங்கள் வாழ்விடங்களில் செய்வதுடன் அயல்வீடுகளில் வாழும் பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தும் செய்துவந்தனர். பனையிலிருந்து சார்வோலை பெறுதல், அதனைக் காயவைத்துப் பதப்படுத்துதல், பதப்படுத்திய ஓலைகளை குத்திக்கீறி மொளிப்பகுதியான ஈர்க்கு நீக்குதல், ஓலையை வாருதல், ஓலைகளைச் சார்வோலை, குருத்தோலைகளாகப் பிரித்து ஓலைப்பிடிகள் கட்டுதல், வார்ந்த சார்வோலைகளுக்குச் சாயம் காய்ச்சிப் பிடித்தல், தனிச்சார்வோலைப் பாய், தனிக்குருத்தோலைப் பாய், சாயமிடப்பட்ட ஓலைகளால் வன்னமிடப்பட்ட பாய் முதலியவகைப் பாய்களை இழைத்தல் என்று பாய் ஒன்றைத் தயாரிப்பதற்கான செயன்முறை நீண்டதும் ஆட்துணை தேவைப்படுவதுமாக அமைந்தது. 

பாய் ஒன்றை இழைப்பதில் அடியிடுதல், ஈர்க்குவைத்து மூலைகட்டுதல், இழைத்தல், தலைகட்டுதல்(தலாட்டுதல்), ஒட்டுவெட்டித் துப்புரவு செய்தல் முதலிய செயன்முறைகள் உள்ளடங்கியிருக்கும். ஒரு பாயை ஒருவரே இழைத்து முடித்தலும், இருவர் சேர்ந்து பாதி பாதியாக வகுத்து ஒரே நேரத்தில் இழைத்தலும் வழமை. இழைக்கப்பட்ட பாய்களை மாலைச் சந்தைகளுக்கு இழைத்தவர்களே கொண்டு சென்று விலைபேசி விற்பதும், சில வியாபாரிகள் வீடுவீடாக வந்து பணம்கொடுத்து சேகரித்துச் செல்வதும், சில சமயங்களில் பனை அபிவிருத்திச்சபை வியாபார நிலையங்கள் கொள்வனவு செய்வதும் வழமையாகவிருந்தது.

பாயிழைத்தலை தமது சுயதொழிலாகக் கொண்ட பெண்கள் கிராம மட்டங்களில் நெறிப்படுத்தப்படாத அல்லது முறைசார் ஒழுங்கமைப்புக்கு உட்படாத ஒரு சுயஉதவிக் குழவின் பண்பமைதியுடன் இயங்கிவந்தமை வியப்பானது. இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் பின்வரும் பயன்களைப் பெற்றதால் அவர்கள் ஒரு சுயஉதவிக் குழுவுக்கான அடிப்படைகளுடன் இயங்கினர் எனலாம்.

குடும்ப வருமானத்தில் ஆணின் அல்லது கணவனின் உழைப்பின் குறைநிரப்புச் செய்யும் ஒரு வருமான மூலமாகப் பெண்கள் அல்லது மனைவி தொழிற்பட வாய்ப்பு ஏற்பட்டது. இது ஆண்கள் என்ற இன்னொரு தரப்பினருடன் இணைந்து தொழிற்படும் நிலைக்கு பெண்களை ஆக்கியுள்ளது.

குடும்ப சேமிப்பில் பெண்கள் கூடி 'சீட்டுப்பிடித்தல்" பன்னமிழைத்தல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடையே சாமாந்தரச் செயற்பாடாக இருந்ததால் எதிர்கால நிலமைகளைச் சமாளிக்கும் சேமிப்பாற்றல் இந்தப் பெண்களிடம் இருந்தது. இது பெண்களின் பொருளாதார ஆற்றலை நிலைநிறுத்தவும், எதிர்கால முதலீட்டுக்கான வாய்ப்பினையும் அதிகரிப்பதுடன் பிள்ளைகளின் கல்வி முதலான நீண்டகால நிலைத்திருக்கும் முதலீடுகளுக்கும் உதவும்.

கூடிப் பாயிழைக்கும் பெண்கள் மத்தியில் அவர்களது குடும்பச் செயற்பாடுகளில் பரஸ்பரம் ஒத்துழைத்து உதவிபுரிந்து செயற்படும் ஒருவகை இசைவுநிலை காணப்பட்டது. இதன்மூலம் பங்காளித்துவம் வளர்க்கப்பட்டிருந்தது.

கூடிப் பாயிழைக்கும் பெண்கள் தமக்கிடையே தங்கள் குடும்பங்களில் நிலவும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளைப் பேசிப் பகிர்ந்துகொள்ளக் கூடிய நேரம் வாய்ப்பதால் பிரச்சினை தீர்த்தலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்குமான வழிகள் பரஸ்பரம் சாத்தியமாகின.

பெண்களே பெரும்பாலும் இத்தொழிலில் ஈடுபடுவதால் 'ஊர்க்கதைகள் பேசுதல்" தவிர்க்கவியலாத ஒன்றானது. இது வீட்டுப் பணிப்பெண்களுக்குத் தாம் வாழும் சமூகம் தொடர்பிலான போக்குகளைப் பகிர்ந்துகொள்ள வழி ஏற்படுத்தியது. இது அறிதல் சார்ந்த செயற்பாடாகவும் உளமகிழ்வளிக்கும் செயற்பாடாகவும் அமைந்தது.

வீட்டுப்பணிகளை மாத்திரம் செய்துவிட்டு மீதி நேரத்தில் ஓய்வெடுக்கும் பெண்களைவிட இத்தொழில் செய்யும் பெண்களிடையே நேரத்தின் பெறுமானத்தை உணரும் நிலையும் எப்போதுமே தம்மை நேரத்துடன் ஒன்றித்துவைக்கும்(occupy) நிலையும் காணப்பட்டது. இது நேரத்தினைப் பணமாக்கும் வல்லமையினைப் பெண்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது.

ஒவ்வொரு பாயும் இழைத்து முடிக்கும் தருணத்தில் அதன் பணப்பெறுமதியால் மனதில் ஏற்படும் திருப்தி என்பதற்கு அப்பால் கலை அழகுடன் ஒரு பொருளைப் படைத்தல்(creation) தொடர்பாக ஏற்படும் உளத்திருப்தி அந்தப் பெண்களிடம் ஏற்பட்டது. இது பெண்களைப் புதியது புனையும் ஆற்றலுள்ளவர்களாக இனங்காண வைத்தது.

கூடிப் பாயிழைக்கும் பெண்களிடையே பணக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்து வந்ததால் எப்போதுமே தக்கதருணத்தில் உதவ ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வலுப்பெற்றிருந்தது. இது கூட்டுநிலைச் செயற்பாடுகளை நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் வாய்ப்பினை அதிகரித்திருந்தது.

புகையிலை முடிதல் புகையிலைச் சிப்பங்கட்டல் போன்ற நோக்கங்களுக்காக பாய்களை அயலிலுள்ள பெண்கள் கூடி ஓர் இலக்குக் காலத்தினை(target time) நிர்ணயித்து இழைக்கின்ற வழக்கம் இருந்தது. இது இவர்களை ஒரு குறிக்கோளை முன்னிறுத்தி வேலை செய்பவர்களாக ஆக்கியிருந்ததுடன் பெரிய வியாபார வலைப்பின்னல்களின் ஒரு பகுதியாகவேனும் தங்கள் உற்பத்தியை கேள்வியுடன் வியாபாரம் செய்பவர்களாக மாற்றியது. இது பெண்கள் தம்மை ஒரு அமைப்பாண்மையாக வடிவமைத்துக்கொள்ள அடிப்படையானது.

குடும்பத் தலைவி அல்லது சகோதரி இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருமானமீட்டி குடும்பத்து நிதித் தேவைகளில் குறைநிரப்புச் செய்யும் நிலை வீட்டிலே கண்கூடாகக் காணப்படுவதால் குடும்பத்திலுள்ள ஆண்பாத்திரங்கள் ஓலை சேகரித்துக் கொடுத்தல், ஈர்க்குக் குத்தி நீக்குதல், சாயம் காய்ச்சுதல், ஓலை பதப்படுத்துதல் முதலிய சற்றுக் கடினமான வேலைகளில் ஒத்தாசை செய்ய முனைவதால் பொறுப்புப் பகிர்வும், ஆண்கள் பெண்களின் தொழிலில் பங்காளியாவதும் குடும்ப உறவுப் பிணைப்பும் அதிகரிக்கின்றது.

மேற்காட்டப்பட்ட விடயங்கள் பெண்களுக்கான ஒரு பாரம்பரியமான தொழிலில் உள்ளடங்கியுள்ள சுயஉதவிக் குழுவுக்கான பண்புக்கூறுகளை புலப்படுத்துகின்றன. இவ்வாறான பெண்களுக்கான தொழில்கள் பலவற்றினைக் கிராம மட்டங்களில் இனங்காணலாம். அத்தொழில்கள் ஒவ்வொன்றினுள்ளும் இன்று நவீனத்துவக் கருத்தாக்கமாகக் கூறப்படுகின்ற பெண்கள் வலுவூட்டலுக்கான சுயஉதவிக் குழுக்களின் செயன்முறைக்கான பண்புக்கூறுகள் உள்ளடங்கியுள்ளதனை நுண்மையான அவதானத்தின் வழிகண்டறியலாம். 

இத்தகைய பாரம்பரியமான பெண்களுக்கான தொழில்கள் இன்றைய நிலையில் பல்வேறு காரணிகளால் மாற்றங்களுக்குட்பட்டு வருகின்ற நிலையில் நவீனமான பொறிமுறைகளை உள்வாங்கி அவற்றை கிராமிய மட்டத்தில் பெண்களின் வலுவூட்டலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்? என்பது குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. ஏனெனில், வலுவற்றநிலையில் வாழும் பெண்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த எடுக்கும் தொழில் முயற்சிகளால் அவர்கள் கடன்சுமைக்கு ஆளாபவர்களாகவும், லீசிங் கம்பனிகளின் வலையில் சிக்குபவர்களாகவும், வலுவுள்ள தரப்பினரின் சுரண்டலுக்கு உள்ளாபவர்களாகவும், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்களாகவும் விளங்குகின்றனர். இவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் வழிமுறைகளை பெண்கள் வலுவூட்டல் பற்றிய நவீனமான கண்ணோட்டங்களுடன் கூடியவகையில் இத்தகைய சுயதொழில் முயற்சிகளுடன் இணைக்கின்றபோதுதான் கிராமியப் பெண்களின் வலுவூட்டல் சாத்தியமாகும். கிராம மட்டத்திலான பெண்களுக்கான சுயதொழில் முயற்சிகள் சுயஉதவிக் குழுக்களின் தன்மையுடன் வளரும்போது அது வலுக்குறைந்த பெண்களை வலுவுடையவர்களாக்கும்.   

Comments

Popular posts from this blog

கோவிட்-19 பேரவல காலத்து இளைஞர்கள்: கரிசனைகொள்ள வேண்டிய பாதிப்புகளும் பரிகாரங்களும்